தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மினுக்கு எதிராக யாழ்.மாவட்ட முஸ்லிம்கள் இன்றைய தினம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருகோணமலை இந்துக்கல்லூரியில் அண்மையில் எழுந்த ஹபாயா ஆடை விவகாரத்தில் தமிழத் தேசியக் கூட்டமைப்பினரின் நிலைப்பாட்டை ஆதரித்து வடமாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் தெரிவித்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக யாழ். மாவட்ட முஸ்லிம்கள் இன்றைய தினம் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருகோணமலை சண்முகானந்தா வித்தியாலயத்தில் முஸ்லீம் ஆசிரியைகள் ஹபாயா அணிந்து செல்வது தொடர்பாக, எதிர் கட்சி தலைவர் இரா.சம்மந்தன் முஸ்லீம் பெண்கள் சேலையே அணிந்து செல்ல வேண்டும் என அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அந்த அறிக்கைக்கு ஆதரவாக வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மீன் கருத்து வெளியிட்டிருந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே யாழ்.முஸ்லீம் மக்கள் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்றைய தினம் நன்பகல் அவர்களது தொழுகை நறைவடைந்த பின்னர் யாழ்.பச்சைபள்ளிக்கு முன்பாக ஒன்று கூடிய இவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பியதுடன் மாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மினது உருவ பொம்பையையும் தீ்யிட்டு கொழுத்தியிருந்தார்கள்.
இன்றைய தினம் யாழ். நாவாந்துறை நான்கு சந்தியிலுள்ள ஜூம்மா பள்ளி வாசலில் இடம்பெற்ற மதிய நேர ஜூம்மா தொழுகையின் பின்னர் பள்ளிவாசலுக்கு முன்பாக ஒன்றுகூடிய இவர்கள் தமது எதிர்ப்புக்களை வெளியிட்டனர்.
இவ்விடயத்தில் தனது சொந்த மதத்தினை மதிக்காமல் அஸ்மின் அவர்கள் தெரிவித்துவரும் கருத்துக்களை அவர் நிறுத்திக்கொள்வதுடன் இதற்காக அவர் பொது வெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அத்துடன் அயூப் அஸ்மினுடைய உருவ பொம்மையினையும் ஊர்வலமாக இவர்கள் எடுத்துச்சென்றதுடன், நான்கு சந்தி பகுதியில் அதனை தீயிட்டு கொழுத்தி எதிர்ப்பை வெளியிட்டனர்.