காவிரி மேலாண்மை வாரியத்தினை அமைத்திட வேண்டுமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னரும் அதனை செயற்படுத்திடாத மத்திய பாஜக அரசினைக் கண்டித்தும், மேலாண்மை வாரியத்தினை அமைத்திடக்கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், மத்திய அரசோ தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்தும், விவசாயிகளின் வாழ்வுநிலை குறித்தும் கிஞ்சித்தும் கவனத்தில் கொண்டதாக தெரியவில்லை.
அதே சமயம், காவிரி குறித்த செயல் திட்டத்தினை சமர்ப்பித்திட மேலும் 2 வார கால அவகாசத்தினை நீதிமன்றத்திடம் கோரியிருக்கிறது மத்திய பாஜக அரசு. மத்திய அரசின் இத்தகைய செயல்பாடுகளை தமிழக மக்கள் கடுமையாக எதிர்த்துவருவதுடன் ஆங்காங்கே தன்னெழுச்சியுடன் பல கட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “காவிரி மேலாண்மை வாரியம் கண்டிப்பாக அமைக்கப்படும் எனவும், தமிழகத்தின் எந்த பிரச்னைக்கும் பாஜகவை குறைகூறுவது வேடிக்கையாக உள்ளது” எனவும் எதிர்கட்சிகளை விமர்சித்துள்ளார்.